இனரீதியிலான பிரச்சினைகளுக்கு ஒழுக்கமற்ற மதத் தலைவர்களே காரணம்

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி போன்ற ஒழுக்கமற்ற மதத்தலைவர்களினால் இந்த நாட்டில் இனரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் எற்படுவதாக கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான எம்எஸ் சுபைர்     தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள சிங்கள குடும்பங்களுக்கு பால்மா பைக்கற்றுக்களை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

புன்னக்குடா விகாராதிபதி தம்பகல்லே வனரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வ்வில் ஏறாவூர் புளினதலாராமய விகாராதிபதி அழுத்வல தம்மரத்ன தேரர் மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்க விடய பொறுப்பதிகாரி எம்ஜிஏ நாஸர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது இடம்பெயர்ந்த நாற்பது சிங்கள மீனவக்குடும்பங்கள் இங்கு மீளக்குடியமர்ந்துள்ளன.

இக்குடும்பங்களுக்கான வீடமைப்பு உள்ளிட்ட ஏனையவசதிவாய்ப்புக்களை ஏற்படுத்த மாகாண ஆளுநர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்துரைத்த அமைச்சர்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது நூறு பௌத்த விகாரைகளை முஸ்லிம்கள் உடைத்துள்ளதாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளமை கண்டனத்திற்குரியது.

இவர் இதுபோன்ற பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதன்மூலமாக ஓர் இனவாதி என்பதை வெளிக்காட்டியுள்ளார். எறும்பைக்கூட கொல்லக்கூடாது என போதனை செய்யும் பௌத்த மதத்தின் குருவான இவர் இனங்களிடையே குரோதத்தையும் வைராக்கியத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு காத்தான்குடி, ஏறாவூர் ,ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலேயே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இப்பகுதிகளை அண்மித்துள்ள இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஓருசில விகாரைகள் போர்ச்சூழலின் பின்னர் புனரமைக்கப்பட்டு வணக்க வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் சந்தேக உணர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மத குரு ஒருவர் உண்மைக்குப்புறம்பான இனக்கலவரத்தைத் தூண்டக்கூடிய கருத்துக்களை ஊடகங்களுக்குக் கூறியிருப்பது அவரது ஒழுக்கமின்மையை காட்டுகிறது என்றார். (சி)

 

Recommended For You

About the Author: Nasar

error: Content is protected !!