LTTE உறுப்பினர்கள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லை

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ.நிரோஷ் குமார் கோரியிருந்த நிலையிலேயே, இலங்கை இராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இராணுவத்தின் இந்த தகவலை, இராணுவ அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல இலட்சக்கணக்கான தமிழர்கள், இராணுவத்திடம் சரணடைந்திருந்ததாக, அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சரணடைந்த பலர் இன்று காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி வட மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது உறவினர்களை இலங்கை இராணுவம் அழைத்து சென்றதாக பலர் இன்றும் தெரிவித்து வருகினறர். (சே)

பிபிசி

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!