இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்கா உடனான சுற்றுப் பயணத்திற்காக, இன்று காலை 10.55 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை அணி, கட்டாரின், தோஹா வழியாக பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்காவைச் சென்றடைகின்றது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் அனுசரணையுடன், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன், இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
சர்வதேச உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ், இந்த போட்டி நடைபெறவுள்ளது.
அதனையடுத்து, இலங்கை அணி, ஜனவரி மாதம், இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என, இலங்கை கிரக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான, டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணிக் குழாமை, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
அந்தக் குழாமில், அஞ்சலோ மத்தியூஸ் உள்வாங்கப்பட்டிருந்தாலும், லங்கா பிரீமியர் லீக்கின் போது, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தென்னாபிரிக்கா உடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், ஜனவரி மாதம், இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில், அஞ்சலோ மத்தியூஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தொடரின், ஆட்ட நாயகன் விருதை வென்ற வானிந்து ஹசரங்கா, இலங்கை அணிக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான லசித் எம்புல்தேனியா, தில்றுவான் பெரேரா ஆகியோர், சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஒரு டெஸ்ட் சுற்றுப் பயணத்திற்கான, அணியில் அதிகபட்ச வீரர்களின் எண்ணிக்கை 16 என்றாலும், கொவிட்- 19 நிலைமையால், தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், 21 வீரர்களை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.