மட்டக்களப்பு உறுகாமம் சுபைர் ஹாஜியார் பாடசாலை மற்றும் அப்பகுதி மக்களுக்குமான குடி நீர் விநியோகம் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
உறுகாமம் பிரதேசத்தில் அண்மைக்காலமாக நிலவிவரும் கடும்வரட்சி காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களும் குடி நீரைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கியுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு நெதர்லாந்து நாட்டு தனவந்தர்களின் நிதியுதவியுடன் இக்குடிநீர் விநியோகத்திட்டம் அமைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு விடய பொறுப்பதிகாரியும் இப்பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தருமான எம்.ஜி.ஏ.நாஸரின் முயற்சியின் பயனாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 வருடங்களைக் கடந்து விட்ட போதிலும் மாணவர்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான திட்டம் அமுல்செய்யப்படாததனால் காலத்திற்குக் காலம் ஏற்படும் வரட்சியின் போது மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு விடய பொறுப்பதிகாரியும் இப்பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தருமான எம்.ஜி.ஏ.நாஸர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், பிரதேச சமய, சமூக முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)