கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழித்தின போட்டியில் திருமலை கல்வி வலயம் முதலிடம்

அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் திருகோணமலை கல்வி வலயம் முதலிடத்தை பிடித்தது.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் 06 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலே இவ்வலயம் முதலிடத்தையும் மட்டக்களப்பு கல்வி வலயம் இரண்டாம் இடத்தினையும் பட்டிருப்பு கல்வி வலயம் மூன்றாம் நிலையையும் பெற்றுக்கொண்டது.

இதற்கமைவாக இன்று  இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களை அணிவித்ததுடன் சான்றிதழ்களையும் வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வுகளில் பல் சமய பாரம்பரியங்களை நினைவூட்டும் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் அலங்கரிக்கப்பட்ட வாகன பவனிகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பாகவிருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய சந்தியை சென்றடைந்தது. பின்னர் வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஆளுநர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அங்கிருந்து ஆளுநர் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்பட்டு ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மண்டபத்தில் இடம்பெற்ற மங்கள விளக்கேற்றலின் பின்னர் தமிழ் வாழ்த்துப்பா பாடசாலை மாணவிகளினால் பாடப்பட்டது.

நிகழ்வின் வரவேற்புரையினை திருக்கோவில் வலய பிரதி கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் வழங்க தலைமையுரையினை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஆற்றினார்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இதன் பின்னர் ஆளுநர் உரையாற்றியதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்ததுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

விசேடமாக வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் முதல் மூன்று இடத்தினை பிடித்துக்கொண்ட அதிபர் மற்றும் வலயங்கல்விப்பணிப்பாளர்களிடம் வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை ஆளுநரை கௌரவித்து மாகாண பணிப்பாளர் நினைவுச்சின்னமொன்றினையும் வழங்கியதுடன் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் விசேட நினைவு பரிசினையும் வழங்கி வைத்தார்.

நிறைவில் மாகாண மட்ட தமிழ் மொழி தினப்போட்டிகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளை மேற்கொண்ட திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அதிபர் ஆகியோர் மாகாண கல்விப்பணிப்பாளரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய ஆளுநர் இலங்கையில் சர்வதேச, தேசிய, மாகாண பாடசாலைகள் உள்ளன. ஆவர்கள் எந்த பாடசாலைகளில் மாணவர்கள் கற்றாலும் நாட்டின் எதிர்காலத்தை ஏந்தக்கூடியவர்களாக் உருவாக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு தேவையான வசதிகளையும் வளத்தினையும் அராசங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதே நேரம் இனபேதம். ஜாதி பேதம் இல்லாது சிறந்த பிரஜையாக அவர்கள் வரவேண்டும் என அந்த மாணவர்களுக்கு நாங்கள் சொல்லி கொடுக்கின்றோம் என்றார்.

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!