முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்-காத்தமுத்து கணேஸ்

தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து முஸ்லிம் மக்களை நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக தமது அமைச்சுப் பதவிகளை துறந்து தமது சமூகத்திற்காக ஒற்றுமைப்பட்டுள்ளதை மனமார வரவேற்கிறேன்.

இந்த ஒற்றுமையைப் பார்த்து தமிழ் அரசியல்வாதிகள் அவர்களிடம் அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளைத்துறந்து சமூக ஒற்றுமையை எடுத்துக்காட்டியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார். பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த ஏப்பிரல் 21 ஆம் திகதி இஸ்லாமிய மதத்திற்கு விரோதமான முஸ்லிம்கள் அல்லாத ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தை வைத்துக்கொண்டு இங்கு வாழும் அனைத்து முஸ்லிம் மக்களையும் பயஙகரவாதிகளாக சித்தரிக்கும் கேவலமான அரசியல் போக்கு நிலவுகின்றது. இந்நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருக்கின்ற முஸ்லிம் மக்களை இனவாத கண்ணோட்டத்தில் பார்ப்பதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.

எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுகின்ற செயற்பாடாக இனவாதிகள் போடுகின்ற கூச்சலுக்கு அரசாங்கம் அடிபணிந்து செல்வதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரசர கால சட்டத்தை காரணம் காட்டி கடந்த முப்பதுவருடகாலமாக தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் ஏராளமாகும். யுத்தத்தினால் துயரங்களைச் சந்தித்த இனம் என்ற வகையில் எமக்கு ஏற்பட்ட துயரங்கள் இன்னொரு இனத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது. இஸ்லாம் மார்க்கத்திற்கு விரோதமான திருக்குரானை முழுமையாக கற்றுக்கொள்ளாத ஒரு சிறிய குழுவினரால் நடத்தப்பட்ட தாக்கதல் சம்பவத்தை காரணம் காட்டி 22 இலட்சம் முஸ்லிம் மக்களையும் பழிவாங்க இனவாதிகள் துடிக்கின்றனர். இன்று இனவாதிகளின் பிடிப்புக்குள் நாடு சிக்கியுள்ளதையே தற்போது பௌத்த பிக்குகளின் தலைமையில் நடக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றது.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதை மிக அழுத்தமாக முஸ்லிம் மக்களின் தலைமைகள் வலியுறுத்திவருகின்றனர். அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறுகின்றனர். யாருக்காவது சந்தேகம் இருந்தால் பொலிஸ் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுகளில் முறையிடலாம் அதனை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம் மக்களை தாக்குவதையும். அவர்களது உடமைகளை நாசப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. முஸ்லிம் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் அரசியல் பலம் ஒன்று மறைமுகமாக இருந்து செயற்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், மாகாணசபை தேர்தல்களில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக இங்கு காய்கள் நகர்த்தப்பட்டுவருகின்றன.

முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மௌனமாக இருக்கின்றனர். தேர்தல் வந்தால் மட்டும் மேடைகளில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைப் பற்றி பேசுகின்றனர். இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூட கழுவுற தண்ணியில் நழுவுகிற மீன்களாகவே இருக்கின்றனர். சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமைப்படாது விட்டால் இந்நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும். தற்போதைய நிலையில் தமிழ் முஸ்லிம்மக்கள் ஒன்றுபடவேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் தமிழ் அரசியல்வாதிகள் அரசியலில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் தங்கள் சமூகத்திற்கு பிரச்சினையென வந்தபோது தங்களுக்குள் உள்ள பகைமையை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்திற்காக ஒருமித்த தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த ஒற்றுமையை தமிழ்த்தலைவர்களிடம் காணமுடியாமை வேதனையளிக்கின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் போன்று ஒற்றுமைப்பட்டிருந்தால் எப்போதோ தமிழர்களுக்கான தீர்வினைப்பெற்றுக் கொண்டிருக்க முடியும். அதைவிட்டு விட்டு அவன் தியாகி, இவன் துரோகி என தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு சுயலாப அரசியலையே தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்கின்றனர். இனியாவது முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பார்த்து தமிழர்கள் திருந்தவேண்டும் என்றார்.(மா)

Recommended For You

About the Author: Thujiyanthan

error: Content is protected !!