ஆயுதப் போரட்டம் முன்னெடுக்கப்படும் என சொல்லப்பட்ட கருத்து பொய் வதந்தி : சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் அது சாத்தியமாகுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எங்கள் இனத்தின் தலைமைத்துவ காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்றே நம்புகின்றேன்.

மேற்கண்டவாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர துணைத்தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமா சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விடுத்த அழைப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

இணைதல் என்பது யார் யார் இணைவது என்பதில் தான் இருக்கின்றது. நான் பிரிந்து போகிறேன் என்று சொல்லி போகிறவரை இணைக்கிறது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் சரி பிழைகளுக்கு அப்பால் கூட்டமைப்பு தான் இன்றைக்கு வடகிழக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கட்சியாக இருக்கிறது.

ஆக கூட்டமைப்பில் சேரக் கூடியவர்கள் எங்களோடு இணைந்து பயணிப்பது தான் பொருத்தமான விடயம்.

அதனடிப்படையில் விக்கினேஸ்வரன் ஏற்கனவே சம்மந்தனால் தான் இங்கே கொண்டு வரப்பட்டவர். ஆகவே அவர் சம்மந்தனோடு பேசி எங்களோட இணைந்து கொள்வதானால் அதிலே எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்க முடியாது.

ஆனால் அது சாத்தியமோ என்றும் எனக்குத் தெரியவில்லை, அது சாத்தியமாகாது என்பதும் எனக்குத் தெரியவில்லை.

ஏனெனில் எங்களுடைய இனத்தின் தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்று தான் நான் நம்புகின்றேன்.

நாங்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறவில்லை, அப்படி பேசுபவரும் அவரல்ல.

ஆனாலும் அவருடைய கருத்தை திரிவுபடுத்தி தவறான கருத்துக்களை முன்வைப்பது நாகரீகமற்றது. ஆகவே பொய்யான காரணங்களை முன்வைத்து தமிழரசுக் கட்சி மீது அல்லது கூட்டமைப்பு மீது சேறு பூசப்படுவதை மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஆற்றிய உரையில் அவர் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுவதாக ஒரு கருத்தை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அவ்வாறான ஒரு கருத்தை அந்த மாநாட்டில் எந்தச் சந்தச்சந்தர்ப்பத்திலும் அவர் தெரிவிக்கவில்லை.

அந்த மாநாட்டிலே முழுமையாக பிரசன்னமாக இருந்தவனென்ற முறையிலும் தமிழரசுக் கட்சியினுடைய தமிழரசுக் கட்சியினுடைய சிரேஸ்ர துணைத் தலைவர் என்ற வகையிலும் இந்த விடயத்தை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறதாக நான் கருதுகின்றேன்.

ஆக அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் இன்னுமொருமுறை ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறவே இல்லை.

அவருடைய உரையினுடைய ஒளிப்பதிவு என்னிடம் இருக்கின்றன. அதிலே உள்ள அவருடைய கருத்து; இந்த அரசாங்கத்தை நோக்கியதாக இருந்தது.
அதாவது பல சந்தர்ப்பங்களில் பிரேமதாசா, சந்திரிக்கா, மகிந்த காலத்தில் கூட அதிகாரப் பரவலாக்கல் சம்மந்தமாகப் பேசப்பட்டது. அதில் மகிந்த ராஐபக்ச கூட 13 பிளஸ் என்றதை தான் பரிசீலிக்கின்றேன் என்று சொல்லியிருந்தார்.

இப்போது விடுதலைப்புலிகளுடைய போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு அவை பின்வாங்கியதைக் குறிப்பிட்டுத் தான் சம்மந்தன் பேசியிருந்தார்.

அதாவது சர்வதேசத்திற்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நீங்கள் மறந்துவிட்டிர்கள் அல்லது மறக்க பார்க்கிறீர்கள் என்று இந்த அரசாங்கத்தை நோக்கி கூறினாரே தவிர இன்னுமொரு ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென்றோ அல்லது முன்னெடுக்கப்பட வேண்டுமென்றோ சம்மந்தர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறியதற்கான ஒளிநாடா இருக்கிறது. ஆனால் சிலர் தங்களுக்கு அல்லது தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி அவருடைய பேச்சைக் கற்பிதம் செய்து கொண்டு ஏதோ ஓர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறி தவறான கருத்துக்களை முன்வைப்பது நாகரீகமானதாக தென்படவில்லை.

ஆகவே இவ்வாறான கோரிக்கை விடுத்தார் என்று சொன்னது மறுதலிக்கப்படுகின்றது. அவ்வாறான கருத்துச் சரியானது அல்ல என்பதை பொது மக்கள் புரிந்த கொள்ள வேண்டும்.

அவ்வாறான ஒரு கருத்தை கூறுபவரும் அவரல்ல. மேலும் சாத்வீக ரீதியான போராட்டம் 40 வருட காலம் நடந்தது என்பதையும் அது மீண்டும் தொடருமென்பதையும் இராஐதந்திர ரீதியாக இந்தப் போராட்டம் இந்த முன்னெடுப்பு தொடருமென்று கூறிவருகின்ற சம்மந்தர் ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பது பற்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் பேசக் கூடியவருமல்ல.

மேலும் ரணசிங்க பிரேமதாசா காலத்தில் கூட தீர்வுபற்றி பேசப்பட்டது. அதற்கான முன்முயற்சிகள் பல தொடர்ந்தன. இதை நான் தனிப்பட்ட முறையிலும் அறிந்திருக்கிறேன். சுந்திரிக்கா காலத்திலும் கூட பிராந்தியங்களின் இணைப்பு என்ற அரசியல் முன்னெடுப்பு ஒன்றும் முன்வைக்கப்பட்டது. அதற்கும் மேலாக நான் ஏற்கனவே சொன்னது போல மகிந்த ராஐபக்ச கூட தீர்வு தருவேன் என்று சொல்லி அதுவும் 13 ஆவது திருத்தத்திற்கு மேலான தீர்வு என்று சொல்லி வந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பிறகு எந்த முயற்சிக்குமு; இடையூறாக இருப்பது மட்டுமன்றி கடந்த ஐனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் பின்பு ஒரு அரசமைப்பு மாற்றத்திற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அந்த வரைபுகள் வருகின்ற பொழுது இந்த அரசாங்கம் கூட பின்வாங்கி எதிர்க்கட்சிகள் கூட அதை எதிர்த்து இப்பொழுது அந்த முயற்சியை முழுமையாக மழுங்கடித்திருக்கின்றன.

அதாவது ஆயுதப் போராட்டம் இருந்த காலத்தில் ஒரு தீர்விற்கு முயற்சித்த தென்னிலங்கை ஆயுதப் போராட்டம் இல்லாத காலத்தில் அதைப்பற்றிப் பேசாமல் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து எதிர்த்து நிற்பதைத் தான் சம்மந்தன் அப்பொழுது சரியாக அரசியல் தீர்வு பற்றியும்; அதிகாரப்பகிர்வு பற்றியும் பேசியவர்கள் இப்போது அதையெல்லாம் மறந்து விடுகின்றார்கள் என்பதைத் தான் அவர் சொன்னார்.

அதற்கு மேலாக ஆயுதம் ஏந்தி அவர்கள் போராட்டம் நடாத்திய காலத்தினாலே அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கும் இறங்கி வந்தது என்று தனது உரையில் குறிப்பிட்டிருக்கின்றார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!