உயர் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாற்றம்!

உயர் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம், பொலிஸ் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சின் அதாவது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமளித்து, அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் முதல், அதற்கு மேற்பட்ட பதவிகளை உடையவர்களின் இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான அதிகாரம், சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அப்பதவி நிலைக்கு கீழுள்ளவர்கள் தொடர்பில் செயற்பட, பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அமைச்சின் செயலாளருக்கு, உயர் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை வழங்கும் விதமாக, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பி.தயா செனரத்தின் கையெழுத்துடன், வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவி நிலைகளைக் கொண்ட அதிகாரிகளின் இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்த கட்டுப்பாடுகள், ஓய்வு பெறுதல் தொடர்பான கட்டளை தொடர்பில் தீர்மாங்களை எடுக்கும் அதிகாரம், அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று, இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட சரத் வீரசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பொலிஸ் திணைக்களம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன, சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் உள்வாங்கப்படும். எவ்வாறாயினும், இன்று வரை அந்த அமைச்சின் செயலாளர் யார் என அறிவிக்கப்படவில்லை.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!