அம்பாறை அக்கரைப்பற்றுப் பொதுச்சந்தையில், 10 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அக்கரைப்பற்றை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொதுச்சந்தை வளாகத்தில் எழுமாற்றாக 20 பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அவர்களில் 10 பேருக்கு இன்று காலை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரனைத் தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவியபோது, அக்கரைப்பற்றில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கிழக்கு மாகாணத்திலும் கணிசமானோர் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு மாகாணத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனாத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.