நாளை, விசேட பாதுகாப்புடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஆலய பகுதியில் குடிகொண்டிருந்த பௌத்த துறவி, சர்ச்சைக்குரிய விகாரை ஒன்றை நிறுவி, தொடர்ச்சியாக குழப்ப நிலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், ஆலய உற்சவத்திற்கு சவாலாக, இன்று பிரித் ஓதும் நிகழ்வில் ஈடுபடுவதாக இருந்தார்.

இதன் காரணமாக, ஏற்கனவே ஆலய நிர்வாகத்தினர், தங்களுடைய வருடாந்த உற்சவத்திற்கான அனுமதியை பொலிசாரிடம் பெற்றதன் அடிப்படையில், ஆலயத்தினுடைய பூஜை நடவடிக்கைகளுக்கு எந்தவித குழப்பங்களும், பௌத்த மத குரு உள்ளிட்டவர்களால் ஏற்படுத்தப்படாத வண்ணம், பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், இன்று பிரித் ஓதும் நிகழ்வுகளை நடத்துவதற்கு வந்த மக்கள் மற்றும் அங்கே குடிகொண்டிருக்கின்ற பௌத்த துறவி உள்ளிட்டவர்களிடம், பொலிஸார் ஆலயத்தினுடைய பூஜை வழிபாடுகளுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்த நிலையில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து, விசேட பொலிஸ் பாதுகாப்புடன், மிகவும் சிறப்பான முறையில் பொங்கல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாளை அதிகாலை 3.00 மணிக்கு, கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துச் செல்லப்பட்டு, ஆலயத்தில் நாளை மாலை வரை பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

எனவே, பூஜை வழிபாடுகளில் பக்தர்களை கலந்துகொள்ளுமாறு, ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!