வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில், தமது பூர்வீக காணிகளை வன வளத்திணைக்களம் கையகப்படுத்துவதாக தெரிவித்து, காணி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், 1974 ஆம் ஆண்டு முதல் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும், தமது கிராமத்தவர்களுக்கு சொந்தமான 428 ஏக்கர் காணியை, தற்போது வன வளத்திணைக்களத்தினர் தமது எல்லைக்குட்பட்டதாக தெரிவிப்பதாகவும், அது தொடர்பில், எதுவித சாதகமான பதிவையும், எவரும் தமக்கு வழங்கவில்லை எனவும், மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், 428 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம், 428 ஏக்கர் காணி, தமது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலையில், குறித்த காணிகளுக்குள், தாம் தென்னை போன்ற பயன்தரு மரங்களை வைத்ததாகவும், உழுந்துச் செய்கை மேற்கொண்டு வந்தாகவும், மக்கள் தெரிவித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுடன், காணி ஆவணங்கள் தொலைந்து போன நிலையில், மீள்குடியேறி காணிகளை சீர் செய்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், வன வளத்திணைக்களம் தமது காணி என உரிமை கோருவதாகவும், மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், கிராம சேவகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கிராம சேவகருடன் பிரசன்னமாகியிருந்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!