நுவரெலியா கபரகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய மாகாணத்தில், நுவரெலியா ஹங்குராங்கெத்த எலமுல்ல கபரகல தமிழ் வித்தியாலயத்திற்கான வகுப்பறை கட்டட தொகுதி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், கட்டடத்தை திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சின் மூலமாக, 12.5 மில்லியன் ரூபா செலவில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், தளபாடங்களுக்காக 15 இலட்சம் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.
வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஹங்குராங்கெத்த வலய கல்வி அதிகாரிகள், அருகில் உள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, 13.7 மில்லியன் ரூபா செலவில், ஆசிரியர் விடுதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், இன்று இடம்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்…
‘போதைப்பொருட்களை ஒழித்துக்கட்டுவதற்காக முழு ஆதரவையும் வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.
ஆனால் அவர் கடந்த வாரம் வெளியிட்ட கருத்து தான் எமக்கு மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல, இந்த கருத்தானது தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் செயலாகவே பார்க்கின்றோம்.
போதையை ஒழிக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கை சரியானது. ஆனால் அதனை மையப்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடக்கூடாது. என குறிப்பிட்டார். (சி)