நாட்டை நேசிக்கும் தலைவரே ஜனாதிபதியாக வரவேண்டும் – கோடீஸ்வரன்

இலங்கை நாட்டை இன்று சர்வதேச வல்லரசு நாடுகள் குறிவைத்து நாட்டின் இறையான்மைக்கு சவால் விடும் வகையில் பல்வேறு உடன்படிக்கைகளை அரசாங்கத்துடன் செய்து கொண்டு, இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான அச்சுறுத்தல்களை மறைமுகமாக வல்லரசு நாடுகள் முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் பாடசாலை வீதியை காப்பட் வீதியாக மாற்றுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உலக வல்லரசு நாடுகள் தங்களின் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் பிராந்திய நாடுகளை தங்களின் ஆளுகைக்குள் வைத்திருப்பதற்காக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இலங்கையில் சர்வதேச வல்லரசு நாடுகள் பலதரப்பட்ட உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த உடன்படிக்கைகள் ஊடாக இலங்கை நாட்டின் பொருளாதாரம, இறையாண்மை, நாட்டின் அமைதி என்பன சிதைவடையக் கூடிய அச்ச நிலைமைகள் ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு.

அந்தவகையில் அமெரிக்கா,சீனா,இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இன்று இலங்கையை குறிவைத்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு,இறையாண்மை மற்றும் இஸ்திரதன்மைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு எமது இலங்கை நாட்டை பகடக்காய்களாக பயன்படுத்துகின்ற வேலைகளை கச்சிதமாக முன்னெக்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

இந்நிலையில் நாட்டின் இறையாண்மை, நாட்டு மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் அதி கருசணை காட்டக்கூடிய தலைவர் ஒருவரை நாட்டு மக்கள் கொண்டு வரவேண்டும். மக்கள் கடந்த காலம் போல் இல்லாது சிறந்த ஒரு ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

அந்தவகையில் இந்த நாட்டு மக்களின் வாழ்வில் ஒளி வீசிய ஏழைகளுடன் இருந்து ஏழையாக சேவை செய்து வருகின்ற வீட்டுத் திட்டங்களின் ஊடாக எங்கள் மக்களின் வாழ்வில் ஒளிவீசிய நபர்களை தெரிவு செய்ய வேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு உண்டு அதனை நீங்கள் சரியாக செய்வீர்கள் என தனது உரையில் மேலும் தெரிவித்து இருந்தார் .

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், தவிசாளர் இ.வி.கமலராஜன், பிரதேச சபை உறுப்பினர்களான கே.காந்தரூபன்,கே.கமல்,வீ.ஜெயச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டி.சுரேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு இருந்ததுடன், நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், புதிய பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி பொது மக்களினால் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(சி)

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!