பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய தொழிற்துறையினருக்கு தேவையான நிவாரண வேலைத்திட்டத்தை முறையாகவும், வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சிறிய மற்றும் மத்தியதர வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, நிதி அமைச்சின் அதிகாரிகள், வர்த்தக அமைச்சு, மத்திய வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
சுற்றுலா தொழிற்துறையின் எதிர்காலம் தொடர்பாக எதிர்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு இந்ததுறையை மேம்படுத்துவதற்காக நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குறிப்பாக நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிவாரணங்களை வழங்குவதற்கான சில முன்மொழிவுகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)