ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்கள் – மாற்றங்கள் இல்லை! – ஜனாதிபதி!

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘நாட்டுக்காக வேலை’ கலாசாரத்தை உருவாக்குவதற்காக, 60 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு, அடையாள ரீதியாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு, 25 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில், எளிமையான முறையில் இடம்பெற்றது.

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரி இருந்தாலும், ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், 60 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்தது.

அதனடிப்படையில், இன்று அரச சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை, 50 ஆயிரத்து 177 ஆகும்.

அதில் 38 ஆயிரத்து 760 பேர் பெண்களாவர்.

தொழில்களை பெற்றுக் கொண்டவர்களில் கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை, 31 ஆயிரத்து 172 ஆகும்.

பட்டதாரிகளை வகைப்படுத்தும் பொழுது, உள்வாரி பட்டதாரிகள் 29 ஆயிரத்து 156 பேரும், வெளிவாரிப் பட்டதாரிகள் 20 ஆயிரத்து 322 பேரும், தேரர்கள் ஆயிரம் பேரும், நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

ஏனைய பட்டதாரிகளில், வனிகத்துறை ஆயிரத்து 839, முகாமைத்துவம் 7 ஆயிரத்து 278, விஞ்ஞானம் 4 ஆயிரத்து 494, சுதேச வைத்தியத்துறை 143, இணை சுகாதாரம் 161, கணனி தொழில்நுட்பம் 989, பொறியியலாளர் மற்றும் சட்டம் 233 பேர் உள்ளிட்ட கணக்காய்வு டிப்ளோமாதாரிகள் 1906 பேரும் அடங்குகின்றர்.

நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள், தலைமைத்துவம், திறன் மற்றும் எண்ணக்கரு அபிவிருத்தி பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

ஒரு வருட கால பயிற்சி நிறைவின் பின்னர், கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், பிரதேச நீர்ப்பாசன அலுவலகங்கள், வனஜீவராசிகள் அலுவலகம், சுதேச ஆயுர் வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள், மருந்தகங்கள், சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கை அலுவலகம் போன்ற கிராமிய பிரிவுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்களுக்கு, நியமனம் பெற்றவர்களை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, ஜனக்க பண்டார தென்னக்கோன், கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அலகப்பெரும, நாமல் ராஜபக்ஷ மற்றும் பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணி தலைவர் பசில் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் சிலரும், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அபிவிருத்தி செயற்பாட்டுக்கு செயற்திறனுடன் பங்களிக்குமாறு, நியமனம் பெற்றவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அரச சேவைக்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய, விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சுமையாகாமல், நாம் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

எமது தொழிலில் முன்னோக்கி பயணிக்கக்கூடிய வகையில், பட்டப்பின் படிப்பு, கணனிப் பயிற்சி மற்றும் குறித்த துறைசார் ஏனைய தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவது, நியமனம் பெற்றவர்களின் பொறுப்பாகும்.

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக, பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நியமனங்கள் அனைத்தும், எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக,
மிகவும் சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, நியமிக்கப்பட்டவர்களின் தேசப்பற்று, தகைமைகள் மற்றும் பின்புலம் பரீட்சிக்கப்பட்டு, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில், அரசாங்கத்தின் கொள்கையை சிறப்பாக முன்னெடுப்பதற்கு இயலுமான வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால், வேறு ஒருவரை அதற்காக நியமிப்பதற்கு, எவ்வித எதிர்பார்ப்பும் எம்மிடம் இல்லை.

அதனால் சில நியமனங்களுக்கு எதிராக, அதனை மாற்றுமாறு, எமக்கு அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம்.

நியமனங்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை முன்வைப்பதன் மூலம், தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகள், விடயதானங்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு முடியாமல் போவதோடு மட்டுமன்றி, சமுதாயத்தில் அந்நபர்கள் பற்றி தப்பான எண்ணங்கள் ஏற்படுவதினால், அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத் திட்டங்களும் வீணடிக்கப்படும். என குறிப்பிட்டார். ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்கள் – மாற்றங்கள் இல்லை! – ஜனாதிபதி!

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!