அல்தயர் வதிவிட மற்றும் வர்த்தகக் கட்டிடத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்

பேர வாவிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்தயர் வதிவிட மற்றும் வர்த்தக கட்டிடத்தை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டார்.

பேர வாவியுடன் இணைந்ததாக இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டிடத்தின் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இக்கட்டிடத்தின் நிலமாடி 40 ஆயிரம் சதுர அடிகளை கொண்டதாகும். 404 அதி சொகுசு வீடுகளையும் உயர்தரமான கடைத் தொகுதிகளையும் இது கொண்டுள்ளது. இரண்டு கோபுரங்களைக் கொண்ட அல்தயர் கட்டிடத் தொகுதியின் ஒரு கோபுரத்தில் 68 மாடிகளும் அடுத்த கோபுரத்தில் 63 மாடிகளும் உள்ளன.

முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணப் பணிகளை கண்காணித்து வருகின்றது.

இக்கட்டிடத்தின் பணிகள் நிறைவுபெற்றதும் கொழும்பில் உள்ள உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றாக அல்தயர் கட்டிடமும் இருக்கும்.

இக்கட்டிடத் தொகுதியின் சுமார் 98 வீதமான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இத்தகைய நிர்மாணப் பணிகள் சுற்றுலாத்துறையினரை ஈர்ப்பதற்கு காரணமாக அமையுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பிரதீப் மொராயஸ் ஆகியோரும், இதன்போது சமூகமளித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!