மரண தண்டனை கண்டிப்பாக நிறைவேறும் : ஐ.ம.சு.மு

போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

கடந்த காலங்களாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்ட ஜனாதிபதி இம்முறை வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் அந்தக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறையிலிருந்தும் அதனைத் தொடர்ந்து கைதிகள் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்கு எதிராக நாட்டில் பல்வேறு மட்டத்திலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருவதோடு சர்வதேசத்திலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, மரண தண்டனை வழங்கும் அரச தலைவர் சிறிசேனவின் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த அமரவீர…

‘மரண தண்டனை தீர்மானத்திற்கெதிராக 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களுக்காக சிலர் முன்நிறுத்தப்பட்டுள்ளனர். இறுதியிலேயே முடிவு வெளிவரும். எனினும் ஜனாதிபதியின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. குண்டுவெடிப்பின் பின்னர் இந்த முடிவை ஜனாதிபதி எடுத்தார் என்று சிலர் கூறலாம்.

ஆனாலும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக ஜனாதிபதி பல காலங்களாக வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

சொன்ன சொல்லை ஜனாதிபதி நிறைவேற்றுவதில்லை என்று கூறலாம். இப்போது எடுத்திருக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி மாற்றிக்கொள்வதாக இல்லை.

இதேவேளை ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முடிவெடுத்திருக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முடிவெடுத்திருப்பதோடு ஒருசில பெயர்களும் அறிவிக்கப்படுகின்றன.

எனினும் அனைத்து விடயங்களையும் ஒன்றுசேர்த்து ஒரு வேட்பாளரை முன்நிறுத்துவதற்கே பேச்சு இடம்பெறுகிறது. பேச்சின் இறுதி முடிவாக கட்சிகள் இரண்டும் இணைந்து ஒரு ஜனாதிபதி வேட்பாளரும், பிரதமர் பதவிக்கு ஒருவரும் பரிந்துரைப்பதாக அமையவேண்டும். ஆனாலும் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்தே பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

எமக்கிடையே 25 விடயங்கள் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும் புதிதாக உருவாக்கப்படவுள்ள கூட்டணிக்கும் நாங்கள் இணங்கியுள்ளோம். இன்னும் சில விடயங்களே எஞ்சியுள்ள நிலையில் இறுதியாகவே வேட்பாளர் தீர்மானம் எடுக்கப்படும்’. என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!