பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதன் ஊடாக, தற்காலத்தில் முன்நகர்ந்து செல்ல முடியாது : ஜி.எல்.பீரிஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இனவாத சிந்தனையில் தொடர்ந்தும் செயற்பட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை போல், மக்களால் நிராகரிக்கப்படுவார் என, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பு இராஜகிரியவிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தாங்களே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிவித்து வந்தனர்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும், தமிழ் மக்களின் குரல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என்றும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் இன்று அந்த தர்க்கம் தோற்றுவிட்டது.

2015 ஆம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகையில், இரண்டு இலட்சம் வாக்குகள் வரை சரிந்துள்ளன.

5 இலட்சத்து 15 ஆயிரத்து 963 வாக்குகள் 2015 ஆம் ஆண்டிலும், 2020 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 160 வாக்குகளே கிடைத்தன.

நாடாளுமன்ற ஆசனங்களும் அக்கட்சிக்கு 16 இலிருந்து 10 ஆக குறைந்தன.

அதற்கு தெளிவான காரணங்கள் உள்ளன.

தாங்களே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று அவர்கள் கூறிவந்த போதிலும், அதனை தமிழ் மக்களே நிராகரித்து விட்டனர்.

எனக்கு தெரிந்த வகையில், 5 வருடங்களாக, அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கு, கண்ணை மூடி வாக்களித்த எந்த எதிர்கட்சியும் உலகில் இல்லை.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை நிறைவேற்றியது.

அரசியல் தந்திர விடயங்களிலும், ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றியது கூட்டமைப்பே ஆகும்.

அதன் பிரதிபலனே, 2020 ஆம் ஆண்டில் மக்கள் தீர்ப்பளித்ததுடன், கட்சிக்குள் முரண்பாடுகளும் ஏற்பட்டன.

மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல், நல்லாட்சி அரசாங்கத்திற்கு துணையாக நின்றது.

மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ச்சியாக பிற்போட்டு வந்த போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், அரசாங்கத்திடம் அடகு வைத்து அரசாங்கத்தைக் காப்பாற்றியது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், இன்று மாற்றத்துடனான சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர் என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்னேஸ்வரன், உலகில் பழைமை வாய்ந்த மொழியாக தமிழ் மொழியை அடையாளப்படுத்தியிருந்தார்.

இந்த நாட்டில், சுதேச மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழியா அல்லது வேறு மொழியா என்ற தர்க்கங்களை ஏற்படுத்தி, பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதன் ஊடாக, முன்நகர்ந்து செல்ல தற்போதைய காலத்தில் முடியாது.

இன்று சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், இன்று மாற்றத்துடனான சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதனைப் புரியாமல் நடந்து கொள்பவர்களுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும்.

விருப்பமோ இல்லையோ, அனைவரையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு பயணிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!