இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரப் பரவல் வழங்கப்பட்டிருந்தால் 30 வருடகால யுத்தமொன்று ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அரச முயற்சிகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிகாரப் பரவலை மேற்கொள்ளாமல், தேர்தல் வெற்றிக்காக இனப் பிரிவுகளை அரசியல்வாதிகள் மேற்கொண்டமையினால் ஒட்டுமொத்த நாடுமே இன்று பின்தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கண்டி – மஹிய்யாவ பதுர்தீன் மஹ்மூத் மகளிர் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, சுதந்திரத்திற்குப் பின்னர் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கத் தவறியமையே நாடு பின்நோக்கி நகர்வதற்கான காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
(சுதந்திரம் பெற்ற நாள் முதல் எமக்கு ஸ்ரீலங்கா என்கிற அடையாளத்தை ஏற்படுத்த முடியாமற்போய்விட்டது. மூன்று இனத்தவர்கள் இருந்த போதிலும் ஒரே அடையாளத்தை ஏற்படுத்த முடியவில்லை. அயல்நாடுகளில் பல்வேறு இனத்தவர்கள் இருந்தாலும் ஒரே அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். உதாரணமாக இந்தியாவில் 50 மில்லியன் மக்கள் பேசுகின்ற 30 மொழிகள் இருக்கின்றன. அவ்வாறு இருந்தும் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியர் என்கிற அடையாளம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக இனத்தை முன்நிறுத்திவிட்டார்கள். அதற்கு அரசியல்வாதிகள் பொறுப்புகூற வேண்டும்.
சமஉரிமை வழங்கும்போது ஒருதரப்பு எதிர்ப்பு வெளியிட்டது. அவ்வாறு எதிர்த்த பிரிவினர் ஆட்சிக்குவந்து அதிகாரப் பரவலை மேற்கொள்கையில் முன்னர் ஆட்சியிலிருந்து அதிகாரத்தை வழங்கவிருந்த தரப்பு எதிர்த்தது.
1948ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னரிருந்து இதுவரை இந்த நிலைமையே காணப்படுகின்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஜப்பானுக்கு அடுத்ததாக நாங்களே இருந்தோம். எமக்கு பணம் இருந்தது. சர்வதேசத்திற்கு கடன் இருக்கவில்லை. அரச வேலைத்திட்டங்களை எமது சொந்த நிதியில் ஆரம்பித்தோம். பிரித்தானியாவுக்கு போருக்குக்கூட நாங்களே கடன் அளித்தோம். சிங்கப்பூர் நாடு உருவானபோது ஸ்ரீலங்கா போன்ற ஒரு நாடாக சிங்கப்பூரை மாற்றிக்காட்டுவதாக தீர்மானித்தார்கள். ஆனால் இப்போது சிங்கப்பூர் நாடு முன்னிலை வகிக்கின்றது.
நாங்கள் பின்தள்ளப்பட்டுவிட்டோம். உண்மையிலேயே சுதந்திரத்திற்கு அடுத்ததாக அதிகாரங்களைப் பகிரவிருந்தது. ஆனால் இந்தியா அதனை செய்தது. பிராந்தியங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தது. எமது நாட்டில் அரசியலமைப்பை உருவாக்கியபோது சோல்பரி அவர்கள் வந்து கண்டிய இராஜியத்திற்குச் சென்று 03 அல்லது 04 பிராந்தியங்களாக பிரிக்கும்படி அறிவுறுத்தினார். இந்தியாவைப் போன்று அதிகாரங்களைப் பகிருமாறு ஆலோசனை வழங்கினார். ஆனால் அதனை செய்யவில்லை. அன்று அது இடம்பெற்றிருந்தால் ஸ்ரீலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது மாகாணங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் 30 வருடப் போரை முகங்கொடுத்தோம்’. என குறிப்பிட்டுள்ளார் (சி)