யானைகளை, காட்டுக்கு திருப்பி அனுப்பும் பொறிமுறை – ஜனாதிபதி பரிந்துரை!

காட்டு யானைகள், கிராமங்களுக்கு வருவதற்கு பதிலாக, அவற்றை காட்டுக்கே திருப்பி அனுப்பக்கூடிய பொறிமுறை ஒன்றை தயார் செய்து, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு, இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வை வகுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று, வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின், எதிர்கால திட்டங்கள் தொடர்பாக, ஜனாதிபதி அலுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

பல்வேறு மாவட்டங்களில், மக்கள் முகங்கொடுத்து வருகின்ற, காட்டு யானைகள் கிராமங்களுக்கு வரும் பிரச்சினை தொடர்பில், சுமார் 40 வருட காலங்களாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

அதற்கு பல்வேறு தீர்வுகளை செயற்படுத்தினாலும், பிரச்சினை தீரவில்லை.

அதனால், மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கக் கூடிய உடனடி மற்றும் நிலையான தீர்வை கண்டறிவது மிக முக்கியம்.
2019 ஆம் ஆண்டு, யானைகள் கிராமங்களுக்குள் உட்புகுந்ததினால், 122 மனித உயிர்கள் இழக்கப்பட்டன.

407 காட்டு யானைகள் இறந்துள்ளன.

இவ்வருடத்தில் கடந்த 8 மாதங்களில் இழந்த மனித உயிர்களின் எண்ணிக்கை 62 ஆகும்.

இறந்த யானைகள் 200 ஆகும்.

இதனால் பயிர்ச் செய்கைகளுக்கும் அன்றாட வாழ்வுக்கும், அதுபோன்று காட்டு யானைகளின் இழப்பிற்கும் ஏற்பட்டுள்ள சவால் மிகப் பெரியது.

12 இலட்சம் ஹெக்டெயார் வன நிலங்கள், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கைவசம் உள்ளது.

காட்டு யானைகளின் உணவு தொடர்பாக கண்டறிவதும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பாகும்.

என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நீண்ட காலமாக நிலவி வருகின்ற பிரச்சினைக்கு, தீர்வை தேடுவதற்கு அல்லது உபாய மார்க்கங்களை தயாரிப்பதற்கு, குறித்த துறைசார் அதிகாரிகளுக்கு முடியாமல் போனதையிட்டு, ஜனாதிபதி, அதிருப்தி வெளியிட்டார்.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவதை தடுத்து, மனித வாழ்வினையும் பயிர் நிலங்களையும் பாதுகாப்பதற்காக, நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளல் தொடர்பாக கண்டறிவதற்கு குழு அமைக்கப்பட்டது.

வன ஒதுக்கீடுகளில் உள்ள குளங்கள், நீர் நிலைகளை புனர்நிர்மாணம் செய்வதுடன், அப்பிரதேசங்களில், புல் இனங்களை வளர்த்தலை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் அதனை விரிவுபடுத்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும், விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கண்டல் தாவரங்களை பயிரிடும் போது, மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில், சட்டங்களை இலகுபடுத்த வேண்டியுள்ளதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கண்டல் பிரதேசங்களில், இறால் வளர்ப்பை மேற்கொள்வதற்கு உள்ள இயலுமை தொடர்பில், அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஆறுகளில், மணல் அகழ்தலை கட்டுபாடுடன் முன்னெடுப்பதற்கு, அப்பிரதேச மக்களுக்கு அனுமதியளிப்பது தொடர்பாகவும், அவதானம் செலுத்தப்பட்டது.

மக்களின் ஊக்கப்படுத்தலுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள், மக்களின் அவதானத்தில் இருந்து நீங்கியுள்ள காலப் பகுதிகளில், அதனைத் தொடர்ந்து செயற்படுத்துவது, அதிகாரிகளின் பொறுப்பாகும் என, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில், அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க, இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!