அம்பாறை மாவட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைக்கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக யானை கூட்டங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த இரு தினங்களாக காலை முதல் இரவு வரை குறித்த பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யானைக்கூட்டம் திடிரென உட்பிரவேசித்து அப்பகுதிகளில் உள்ள அறுவடை செய்யப்பட் வேளாண்மை நிலங்களை சேதப்படுத்துவதுடன், காடுகளை அண்டிய குடியிருப்புகளையும் சேதப்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு மாவடிப்பள்ளி சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புகள் மீது யானைகள் திடீரென உட்புகுந்து சேதங்களை விளைவித்துள்ளன.

அத்துடன் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியை அண்டிய காரைதீவு முச்சந்திப்பகுதி மற்றும் காரைதீவு ஊடாக மாவடிப்பள்ளியை ஊடறுத்து சம்மாந்துறை அம்பாறையை அடைகின்ற பிரதான வீதியின் இருமருங்கிலும் சுமார் 50க்கும் அதிகமான காட்டு யானைகள் தத்தமது குட்டிகளுடன் தினமும் பிரதான வீதியை கடக்கின்றன. இவ்வாறு பிரதான வீதியை கடப்பதற்கு முன்னர் மக்களின் அரவம் வாகனங்களின் சத்தம் என்பன இடையூறு ஏற்படுத்தினால் அவ்விடத்தில் நின்று அட்டகாசம் புரிய ஆரம்பித்துள்ளதை காண முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் வருகை தந்து வீதியின் இரு முனையிலும் நின்று வீதியால் பயணம் செய்யும் வாகனங்களை நிறுத்தி விசில் அடித்தவுடன் யானை கூட்டம் வீதியை கடந்து செல்கின்றது.

இவ்வாறு தினம் தோறும் இடம்பெறுவதனால் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் இது தவிர ஏனைய பொலிஸ் பிரிவுகளான கல்முனை சவளக்கடை மத்திய முகாம் பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் பயிர் நிலங்களை மற்றுமொரு யானைக்கூட்டம் அடிக்கடி சேதப்படுத்தி வருவதுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!