விவசாய விளைச்சல் – ஜனாதிபதி பல யோசனைகள் முன்வைப்பு

பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விவசாய விளைச்சளை அதிகரிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

அதற்காக பல யோசனைகளையும் ஜனாதிபதி முன்வைத்தள்ளார்.

கொவிட் நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை கண்காணித்து தேசிய விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விதை மற்றும் கன்றுகள் உற்பத்தி, உரப் பாவனை, விவசாய புத்தாக்க ஆராய்ச்சிகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்து துறைகள் குறித்தும் கவனம் செலுத்தி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் சவாலான இலக்கை வெற்றிகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில் விவசாய இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் வருடாந்த உருளைக்கிழங்கு அறுவடை 80 ஆயிரம் தொன்களாகும். நுகர்வோர் தேவை 2 இலட்சத்து 50 ஆயிரம் தொன்களாகும். உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யாது உள்நாட்டிலேயே தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு விவசாயிகளை வலுவூட்ட வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

உயர் தொழிநுட்பத்தின் கீழ் விதைகள் மற்றும் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு மற்றும் ஏனைய கிழங்கு வகைகளை நுகர்வதற்கு வலுவூட்டுவதன் மூலம் உருளைக்கிழங்கு இறக்குமதியை மட்டுப்படுத்த முடியுமென்றும் பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு சோள உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

விதைகள் மற்றும் கன்றுகள் உற்பத்திக்கு நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுடன், அதற்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்தின்போது ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எட்டு வருடங்களாக விவசாய திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. வெற்றிடங்களை விரைவாக நிரப்பி இத்துறையின் முன்னேற்றத்திற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

உயர்தரம் வாய்ந்த பசளைகளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கும் சுகாதாரமான வினைத்திறன் வாய்ந்த தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கும் சேதனப் பசளை பயன்பாட்டிற்கு மாறுவது குறித்தும் கொள்கை சார்ந்த தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இக் கலந்துரையாடிலில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!