முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியினதும் நாட்டினதும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு, தலைமைத்துவம் வழங்குகின்ற சவாலை ஏற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதுடன், அதனை, கட்சித் தலைவருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவது குறித்து, இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கிய, தேசப்பற்றுடைய, தேசியவாத கட்சியாக, டீ.எஸ்.சேனாநாயக்கவினால் தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியைக் குறிப்பிட முடியும்.

அதேவேளை, 21 ஆம் நூற்றாண்டில் ஏற்படக் கூடிய சவால்களை வெற்றி கொள்வதற்கு அவசியமான பொறிமுறை, நிபுணத்துவம் மற்றும் சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்மை ஆகியவற்றையும், ஐக்கிய தேசியக் கட்சியே கொண்டிருக்கிறது.

அவ்வாறிருப்பினும் கூட, தற்போது ஐக்கிய தேசியக் கட்சி முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலை, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் பலர் மத்தியில், கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பெருமளவானோரின் அபிமானத்திற்கும் உரிய, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையிலிருந்து, அதனை மீட்டெடுத்து, அதற்குரிய இடத்தை மீண்டும் கைப்பற்றி, கட்சியினால் இந்த நாட்டிற்கு ஆற்றப்பட வேண்டிய சேவையை முன்னெடுப்பதற்கு முன்வருமாறு, பொதுத்தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், பலரும் எனக்கு அழைப்பு விடுத்தார்கள்.

மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலான, அனைத்து மத குருமார், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், புத்திஜீவிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயலாற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சியுடன் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள், நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் சிவில் சமூக அமைப்புக்களும், என்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தன.

அவர்கள் அனைவருமே, குறிப்பாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினர்.

அதாவது எதிர்வரும் தேர்தல்களில், கட்சி சூன்யநிலையை அடைவதைத் தவிர்ப்பதற்கான, இறுதிச் சந்தர்ப்பம் இதுவென்பதே ஆகும்.

எவ்வாறெனினும், மக்களின் வேண்டுகோளை செவிமெடுத்து, கட்சி ஆதரவாளர்களின் ஆலோசனைக்கமைவாக, கட்சியில் தற்போது மிகவும் அவசியமான மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களைச் செய்து, புதிய பாதையை நோக்கிய, விரைவான மீள்ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியினால், தற்போதைய சவாலில் இருந்து மீண்டெழ முடியும் என்றே, நான் நம்புகின்றேன்.

கடந்த 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ரணில் விக்ரமசிங்க கட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, கட்சித் தலைமைத்துவத்தின் அழைப்பின் பேரில், நான் அந்தக் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டேன்.

அதனைத்தொடர்ந்து, அதில் பல்வேறு பதவிகளை வகித்ததுடன், 2014 ஆம் ஆண்டில், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்குத் தலைமைத்துவத்தை வழங்கி, ஐக்கிய தேசியக் கட்சியின் மேம்பாட்டிற்காக செயலாற்றி வந்திருக்கின்றேன்.

நாட்டில் ஜனநாயகத்தையும் செயற்திறனையும் உறுதிப்படுத்துவதற்காகவே, நான் எனது ஒட்டுமொத்த அரசியல் வாழ்விலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கின்றேன்.

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும், நான் தலைமைத்துவத்தை வழங்கியிருக்கிறேன்.

இவ்வாறு கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நாட்டில் முறையான ஜனநாயக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்னின்று செயற்பட்டு வந்திருக்கிறேன்.

இந்த நிலையில், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பல்வேறு தரப்பினராலும் எனக்கு விடுக்கப்பட்;ட, அழைப்பு தொடர்பில் ஆராயும் அதேவேளை, கட்சியினதும் நாட்டினதும் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்குகின்ற சவாலை, என்னால் ஏற்றுச் செயற்பட முடியும் என்பதை, தற்போதைய கட்சித் தலைவர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறியத் தருவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன்.

கட்சியையும், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டே, நான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதுடன், எனது தாய் நாட்டிற்காக, என்னால் செய்யப்பட வேண்டிய அனைத்து கடமைகளையும், அர்ப்பணிப்புடன் செய்வதற்கும் தயாராக இருக்கின்றேன். என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!