தமிழ் தேசிய உரிமையாளராக மாற வேண்டும் என்பதே, விக்னேஸ்வரனின் நோக்கம் : விமல்!

தமிழ் மக்கள், இன்று இனவாதத்தில் இருந்து விடுபட்டு, இலங்கையர்கள் என்ற அடையாளத்தில் செயற்பட ஆரம்பித்துவிட்டனர் என, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

சம்பந்தனை விடவும் மோசமான விதத்தில், தமிழ் தேசிய உரிமையாளராக மாற வேண்டும் என்பதே விக்னேஸ்வரனின் நோக்கமாக உள்ளது.
ஏனென்றால் விக்னேஸ்வரனுக்கு, வடக்கு கிழக்கு பூமியில் தேசியம் பேச எந்த உரிமையும் இல்லை.

அவர் கொழும்பு 07 இல் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவர்.

அவரது இரு பிள்ளைகளையும், சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார்.

தமிழ் மொழி மூத்த மொழி, தமிழே தனது மூச்சு, தமிழே அவரது பேச்சு என, நாடாளுமன்றத்தில் கூறுவது உண்மை என்றால், என்ன நோக்கத்தில், தனது பிள்ளைகளை, சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துக்கொடுத்தார்.

அவர்களின் உடலில் இல்லாத இனவாதத்தை, வேண்டுமென்றே உருவாக்கி, விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை முன்வைக்கின்றார்.

இவ்வாறு பேசி, தமிழ் மக்களை குழப்பிவிட்டால், தான் சம்பந்தனை மிஞ்சிய வீரராக முடியும் என விக்னேஸ்வரன் நினைக்கின்றார்.

இன்று, வடக்கில், தமிழ் மக்கள், தமிழ் இனவாதத்தை நிராகரிக்கின்றனர்.

16 பேராக இருந்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம், இன்று 10 ஆக குறைந்துவிட்டது.

முதல் தடவையாக, வடக்கில் இருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர், நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

எனவே, தமிழ் மக்கள், இன்று இனவாதத்தில் இருந்து விடுபட்டு, இலங்கையர்கள் என்ற அடையாளத்தில், செயற்பட ஆரம்பித்துவிட்டனர்.

பெரும்பாலான தமிழர்கள், அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர்.

என்னை பொறுத்தவரையில், யாழ்ப்பணத்தில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அங்கஜனுக்கும், அமைச்சு பதவி கொடுக்க வேண்டும்.

கிழக்கில் இருந்து தெரிவாகிய அதாவுல்லாவுக்கும், அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் தமிழ்பேசும் மக்கள் மனங்களை வெற்றிகொண்டு, இலங்கையர்கள் என்ற இணைந்த பயணத்தை முன்னெடுக்க முடியும். என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!