ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று நிராகரித்துள்ளது.

பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன், சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உட்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில், மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்தே பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை மந்திகை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

அத்துடன், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அவர் நேற்று வரை தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேகநபர் நேற்று பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி, பிணை கோரி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

வழக்கில் சட்ட மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட மருத்துவ சோதனையில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமைக்கான ஏதுக்கள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் சந்தேகநபருக்கு பிணை வழங்கவேண்டும்’ என்று மூத்த சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.

எனினும் சந்தேகநபருக்கு பிணை வழங்க பொலிஸார் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் நளினி சுதாகரன், பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என கூறி, அவர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.

அத்துடன், சந்தேகநபரை வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பாடசாலையின் அதிபரையும், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரையும் உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!