தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!!

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களையும் பயன்படுத்தியும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகியிருப்பினும் தற்போதைய கோவிட்-19 நிலைமையைக் கருத்திற் கொண்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள மோட்டார் வாகனத் திணைக்களம் சலுகைக் காலத்தை வழங்கியுள்ளது.

அதன்படி சலுகைக் காலம் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள ஆறு மாதங்களும், ஜூன் முதல் செப்டெம்பர் வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற 03 மாதங்களும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சலுகைக் காலத்தைத் தாண்டாத சாரதி அனுமதிப் பத்திரங்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான அடையாள அட்டையாகக் கருதப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க பிரத்தியேக பேனாக்களை பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவை நீலம் அல்லது கறுப்பு பேனையாக இருக்க வேண்டும் எனவும், அதில் எந்தவொரு கட்சி வேட்பாளரையும் ஊக்குவிக்கும் எந்த அடையாளமும், நிறமும், சின்னமும் இருக்கக்கூடாது எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் ஒருவர் தனக்கான சொந்தப் பேனாவைக் கொண்டு வர முடியாவிட்டால், அத்தகைய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக கிருமித்தொற்று நீக்கம் செய்யப்பட்ட பேனாக்கள் வழங்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!