குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர், கொலைக் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டு தொடர்பான சந்தேக நபர்களாகக் கருதி, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, சட்டமாக அதிபரினால் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அவர்கள் இருவரும் சுகயீனம் காரணமாக, அதாவது, ஹேமசிறி பெர்ணாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட பொலிஸ் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து, வைத்தியசாலைக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)