மன்னாரில் மக்கள் சந்திப்பு : மக்கள் விசனம்

வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்ட போதும், வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ளாத நிலையில் வருகை தந்த மக்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

வடமாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு மாவட்டம் தோறும் இடம் பெற்று வருகின்ற நிலையில், மன்னார் மாவட்ட மக்களின் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளை வடமாகாண ரீதியில் தீர்த்து வைக்கும் வகையில் இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மக்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது வடமாகாணத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் வருகை தந்திருந்த போதும்,வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் சமூகமளிக்கவில்லை.

இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்காக தீர்வை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் ஆளுநர் இல்லாத நிலையிலும்,வருகை தந்த அதிகாரிகளினால் உரிய பதில் கிடைக்காத நிலையிலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.


மேலும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற ஆசிரியர்ளை இன்றைய தினம்(3) ஆளுநரின் மக்கள் சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் வருகை தந்த போதும் ஆளுனர் இல்லாத நிலையில் அவர்கள் பாரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
வட மாகாண ஆளுநர் உற்பட பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள்,மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளும் மக்கள் சந்திப்பிற்கு வருகை தராத காரணத்தினால் குறித்த தொண்டர் ஆசிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!