குத்துச்சண்டையில் வடமாகாணம் இரண்டாம் இடம்! (படங்கள் இணைப்பு)

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீர, வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தில், அக்குறஸ்ச பகுதியில், அத்துறுகிரிய பிரதேசசபை மண்டபத்தில் கடந்த 28, 29, மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியா, பதுளை, கண்டி, மாத்தறை, குருனாகல, கம்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 250 குத்துச்சண்டை வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய மற்றும் சர்வதேச குத்துச்சண்டை பயிற்றுனர் மற்றும் இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிபலித்து வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும், வடமாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் குத்துச்சண்டையில் கலந்துகொண்டு பதினொரு தங்கப்பதக்கங்களையும், ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் அகில இலங்கை ரீதியில் குத்துச்சண்டையில் வடமாகாணம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளதுடன் அதற்கான கேடயத்தை பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவர் சி.பூ.பிரசாந் விக்கிரமசிங்க வழங்கி வைக்க, வடமாகாண

கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் பெற்றுக்கொண்டார்.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியை சேர்ந்த மாணவன் ஆர்.கெ.மைக்கல் நிம்றோத் ஏழு வயதுக்குட்பட்ட 15 தொடக்கம் 20 கிலோ எடைப்பிரிவில் தேசிய ரீதியிலான குத்துச்சண்டையில் பங்கு கொண்டு தங்கப்பதக்கத்தை சுவீகரித்ததுடன், வடமாகாணத்தில் மிகக் குறைந்த வயதில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை பெற்றவர் என்ற பெருமையை தனதாக்கி கொண்டுள்ளார்.

வவுனியா அகில இலங்கை தமிழ் திருச்சபை கலவன் பாடசாலை, கோவில்குளம் இந்துக்கல்லூரி, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி, வவுனியா காமினி மகா வித்தியாலயம், மடுக்கந்த சிறிசுமன சிங்கள வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை அரசினர் தமிழ் கலவன் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் 19 பேர் கலந்துகொண்டு 19 பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!