நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன், எந்தவொரு தனி நபரையும் பாதுகாப்பதற்காக அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மட்டங்களிலும் முன்னெடுப்பதே தனது நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார்.
மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் பொலன்னறுவை, ஸ்ரீபுர மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அனைத்து இலங்கையர்களுக்கும் காணி உரிமை மற்றும் வீட்டிற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் கொள்கைக்கமைய மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டம் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஆரம்பமானதுடன், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டம் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
காணி உறுதி வழங்குதலை அடையாளப்படுத்தும் முகமாக சில குடியேற்றவாசிகளுக்கு ஜனாதிபதி இதன்போது காணி உறுதிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அனோமா கமகே, இசுர தேவப்பிரிய, சாமர சம்பத் தசநாயக்க, பீ.தயாரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நேற்று பிற்பகல் பொலன்னறுவை, ஸ்ரீபுர மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
அடுத்த நாளே, நான் உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை ஸ்தாபித்தேன்.
இதன் அறிக்கை தற்போது எமக்கு கிடைத்துள்ளது. சட்டமா அதிபரும் அதற்கிணங்கவே தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
தற்போது உயர்நீதிமன்றில் 7 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதில் ஒரு வழக்கில் என்னையும் இந்தக் குண்டுத் தாக்குதலின் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளது.
இதுதான் ஜனநாயகம். இதற்கு முன்னர் இவ்வாறான ஜனநாயகம் நாட்டில் என்றும் இருந்ததில்லை.
எனக்கெதிரான வழக்கை நீதிமன்றம் விசாரித்து எந்தவொரு தீர்ப்பை வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.
அத்தோடு, நாட்டை வழிநடத்தவே நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டேன்.
இந்த செயற்பாட்டை நான் மேற்கொள்ளும்போது என்னை ஜனாதிபதியாக்கிய தரப்பினரும் எதிர்த் தரப்பினரும் தற்போது எதிர்ப்பினை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை நான் தடுக்கும்போது, என்னை தவறாகவே இவர்கள் சமூகத்தில் சித்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது முற்றிலும் மக்களை திசைத்திருப்பும் ஒரு செயற்பாடாகும்.
என்னைத் தாக்கினால், எவருக்கும் எந்தப் பிரச்சினையும் வராது என அனைவருக்கும் தெரியும்.
நான் கீழ் மட்டத்திலிருந்து இந்த நிலைமைக்கு வந்த காரணத்தினாலேயே இவ்வளவு சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது.
ஆனால், எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை நான் ஒருபோதும் மீறமாட்டேன்.
இன்று என்னால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் சிலர் நீதிமன்றுக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த செயற்பாட்டை நான் மேற்கொள்கிறேன்.
எனினும், மனித உரிமை மீறல் என இதற்கான தடைகள் தற்போது வந்துக்கொண்டிருக்கின்றன.
இவர்கள் அனைவரும் இன்று போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சார்பாகவே கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்தார். (நி)