ஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இலங்கை தொடர்பான பிரதான குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44 அமர்வில் கனடா, ஜேர்மனி, வடசெடோனியா, மொன்டிநீக்ரோ, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய குழு இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டன.

மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர் ரீட்டா பிரென்ஞ் அந்த அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர் ரீட்டா பிரென்ஞ், கடந்த மார்ச மாதம் முதல் இலங்கை கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்தளவிற்கு நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளதுபோன்று கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக வழமைக்கு மாறான நடவடிக்கைகளை மனித உரிமைகளை பறிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மை குழுக்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவது, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை, மோதலின்போது பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை, பொதுநிர்வாகம் மற்றும் பொதுமுயற்சிகள் பரந்துபட்ட அளவில் இராணுவமயப்படுத்தப்பட்டமை குறித்த இலங்கையின் மனித உரிமை அமைப்புகளின் கவலைகளை தாங்களும் பகிர்ந்துகொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஜனநாயக சூழல் வெளிப்படையானதாகவும் பொறுப்புக்கூறுவதாகவும் காணப்படுவதை உறுதி செய்யுமாறும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கைதுசெய்யப்படுதல் மற்றும் தடுத்து வைத்தலின்போது உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும், அவை சர்வதேச மரபுகள் மற்றும் உலகளாவிய உரிமைகளுடன் இணங்கிப்போவதை உறுதி செய்யுமாறும் பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!