குற்றவாளிகளை நல்லவர்களாக சித்தரிக்கும் தெரிவுக்குழு : தயாசிறி

குற்றவாளிகளை நல்லவர்களாக சித்தரிக்கும் முயற்சியிலேயே, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவாக செயற்படுவதனால், இதுவரை தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகவில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘சட்டமா அதிபரினால் ஜுன் மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதம் ஜனாதிபதி செயலாளரினால், சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
வழமையாக சபாநாயகருக்கு அனுப்பப்படும் உத்தியோகபூர்வமான கடிதங்கள், சபையில் முன்னிலையாக்கப்படல் வேண்டும்.
ஆனால், இந்தக் கடிதம் இதுவரை பாராளுமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
இந்தக் கடிதத்தில் பிரதானமாக, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் நபாராளுமன்ற தெரிவுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, தெரிவுக்குழுவில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு பாதகமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது தொடர்பாக ஆராய்ந்துப் பார்க்க வேண்டும் என இக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தயவு செய்து இந்தக் கடிதத்தை சபையில் முன்னிலைப்படுத்துமாறு நாம் சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறோம்.
சபாநாயகர் என்ற வகையில், இதற்கான பதிலை அவர் வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்திக் கொள்கிறோம்.
அதுவரை, நான் தெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே நான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
36 (ஈ) நிலையியற் கட்டளையின் கீழ், நீதிமன்ற வழக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விடயம் குறித்து கருத்து வெளியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதனையே நான் பின்பற்றிவருகிறேன்.
இது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தால், நான் அடுத்த நாளே தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கத் தயாராகவே இருக்கிறேன்.
உண்மையில், தெரிவுக்குழு முன்னிலையில் கூற வேண்டிய நிறைய விடயங்கள் என்னிடமும் உள்ளன.
ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த தெரிவுக்குழுவானது குற்றஞ்சாட்டப்பட்டவரை நல்லவராக்கும் செயற்பாட்டையே தற்போது மேற்கொண்டு வருகிறது.
குண்டுத் தாக்குதல் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ரிஷாட் பதியுதீன், இன்று தெரிவுக்குழு விசாரணையை அடுத்து நல்லவராக்கப்பட்டுள்ளார்.
இதற்காகவா இந்த தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டது?
இவ்வாறெல்லாம் இடம்பெறும் என்றுதான் நாம், ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டிருக்கிறோம்.
எனவே, குற்றவாளிகளை நல்லவராக்க இந்த தெரிவுக்குழுவை எவரும் பயன்படுத்த வேண்டாம் என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.
ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ என்று முன்னைய எந்த ஜனாதிபதியும் மரண தண்டனையை பயன்படுத்தவில்லை.
அந்த காலங்களில் போதைப்பொருள் பாரியதொரு பிரச்சினையாக காணப்படவில்லை.
ஆனால் இன்று போதைப்பொருள் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனை நிச்சமாக வழங்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியமைக்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையாகி இறந்த நூற்றுக்கணக்கானவர்கள் குறித்து சிந்திக்கவில்லை.
இவ்வாறு நூற்றுக்கணக்கான உயிர்கள் அநியாயமாக பலியாவதற்கு பதிலாக, அந்த மரணங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் கொல்லப்படுவதில் தவறில்லை.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!