மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் பாடசாலையின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கம்பரெலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்ட பாடசாலை மைதானமும் திறந்து வைக்கப்பட்டது.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் ஊடாக சுமார் 3.5 கோடி ரூபா பெறுதியில் பாடசாலையின் பழமையான கட்டடங்கள் முதல் கட்டமாக புனரமைக்கும் பணிகள் இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பாடசாலை சமூகம் நீண்ட நாட்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாகவும், அதற்கு பக்கபலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேற்கொண்ட முயற்சி காரணமாகவும் இந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனினால் கம்பரெலிய திட்டத்தின் இந்துக் கல்லூரி மைதானத்தின் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா ஊடாக புனரமைக்கப்பட்ட மைதானத்தின் பகுதியும் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் திட்ட பணிப்பாளர் கே.பத்மநாதன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் மாணிக்கப்போடி சசிகுமார், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது, பாடல் போட்டியில் சாதனை படைத்த மாணவன் கௌரவிக்கப்பட்டதுடன், மாகாண மட்டத்தில் கரம் போட்டியில் முதல் இடத்தினைப் பெற்றுள்ள அணியினரும் கௌரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை பாண்ட் குழுவினருக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரும் உரையாற்றினர். (சி)