புலம்பெயர் தமிழ் மக்களின் நோக்கங்களை அத்துரலிய ரத்ன தேரர் நிறைவேற்றுகின்றார் : முஜிபுர்

18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
குருநாகலை மருத்துவர் ஷாபியின் விவகாரத்திற்குப் பின்னர் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்டவர்கள் சிசேரியன் சத்திர சிகிச்சை நிபுணர்களாகிவிட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் ரத்தன தேரர் அறிவித்து வருகின்றார்.

இதுபோன்று, போர் காலத்தில் படுகொலைகள் இடம்பெற்றதாக, புலம்பெயர்ந்த சமூகத்தினர் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்களுக்கு அமைய, எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாமைக்கான காரணம், 2002 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த போது ரணில் விக்ரமசிங்க ரோம் பிரகடனத்திற்கு கைச்சாத்திடவில்லை.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அன்றி சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. இவை எதனையும் அறியாமல் ரத்தன தேரர் கருத்து வெளியிடுகின்றார்.

அதேபோல உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்ற புலம்பெயர் சமூகத்தினர், இலங்கை இராணுவம் மீதோ, உள்நாட்டு நீதிமன்றங்கள் மீதோ, நம்பிக்கை இல்லை என்று மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

ஆனாலும் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்தியிருப்பதோடு இனப்படுகொலையுடன் இராணுவம் தொடர்புபடவில்லை என்பதையும் திட்டவட்டமாக நாம் கூறுகையில், ரத்தன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொய்கூறி வருவதாக கூறுகின்றார்.

புலம்பெயர் சமூகத்தின் பிரசாரங்களை ரத்தன தேரர் திரைமறைவில் நியாயப்படுத்துகிறார்.
உள்நாட்டு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும், அமெரிக்கா, இந்தியாவில் இருந்து மருத்துவர்களை அழைத்து வருவதாகவும் ரத்தன தேரர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்றுதான் புலம்பெயர் சமூகத்தினரும், உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லாததினால், வெளிநாட்டு நீதிபதிகளின் அவசியத்திற்கான அழுத்தத்தை பிரயோகிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கும், கல்முனைக்கும் அண்மையில் சென்ற ரத்தன தேரர், சிங்களத் தமிழ் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரத்தன தேரர் புலம்பெயர்ந்த சமூகத்துடன் இரகசியமாக தொடர்வை வைத்து இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

புலம்பெயர்ந்த சமூகத்தினரது நோக்கங்களை ரத்தன தேரர் நிறைவேற்றுகின்றாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

1994 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாகவே வந்தனர்.
அதேபோலவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015 இல் ஆட்சிக்கு வரும் போது இதுவே இறுதியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் நடத்தப்படுகின்ற தேர்தலாகும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டுமென கூறியிருக்கின்றார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதியே அவர் முற்றுமுழுதாக மாறினார்.
மக்கள் நிராகரித்த குழுவுடன் இணைந்துக் கொண்டதன் மூலமாக, அவர் எமது ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்திற்கும், அமைச்சரவைக்கும் எதிரான நிலைப்பாட்டை தற்போதும் கொண்டிருக்கின்றார்.

மீண்டும் மஹிந்த ராஜபக்சவின் யுகத்திற்கு பின்செல்வதற்கு முனைகின்ற ஜனாதிபதியின் இந்த முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.

ஒவ்வொரு தேர்தல்களிலும் கூறப்பட்டு வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான வாக்குறுதியை, நாங்களே 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி யதார்த்தமாக்கியிருக்கின்றோம்.

எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!