“ஜொலிபோய்ஸ் 2019” வெற்றி கிண்ணம்- தம்பட்டை லெவன் ஸ்டார் சம்பியன்

“ஜொலிபோய்ஸ் 2019” மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் தம்பட்டை லெவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நேற்று(30) மாலை இடம்பெற்ற அமரர் செல்லத்தம்பி பாலசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட “ஜொலிபோய்ஸ் 2019” கிரிக்கெட் வெற்றிக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் விநாயகபுரம் விநாயகர் அணியினை எதிர்கொண்ட தம்பட்டை லெவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் அணி 10 விக்கெட்டினால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த இச்சுற்றுப்போட்டியில் ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 24 அணிகள் மோதிக்கொண்டன.

கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்ற 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான இச்சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப்போட்டிக்கு தம்பட்டை லெவன் ஸ்டார் மற்றும் விநாயகபுரம் விநாயகர் அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற லெவன் ஸ்டார் வீரர்கள் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர். இதன் அடிப்படையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த துடுப்பாட்டத்தால் விநாயகர்  அணி 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் எதிர் அணிக்கு 77 எனும் ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லெவன் ஸ்டார் அணி 01 விக்கெட்டினை மாத்திரம் இழந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யுவேசினுடைய அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் 6.4 ஓவர்களில் 77 ஓட்டங்களை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.
தொடரின் தொடர் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர் விருதை லெவன்; ஸ்டார் அணி வீரர் எம்.ராஜேஸ் பெற்றுக்கொள்ள ஆட்ட நாயகன் விருதை லெவன் ஸ்டார் அணி வீரர் யுவேஸ் தட்டிச் சென்றார்.

சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட லெவன் ஸ்டார் அணிக்கும் இரண்டாம் நிலையை பெற்ற விநாயகபுரம் விநாயகர் அணிக்குமான பதங்கங்கள் அதிதிகளால் அணிவிக்கப்பட்டதுடன் வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசும் அதிதிகள் மற்றும் ஜொலிபோஸ் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் மு.சண்டேஸ்வரன், பா.மயூரன் உள்ளிட்ட வீரர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை பிரதேச கல்வி வளர்ச்சி கருதி ஜொலிபோய்ஸ் அணியின் புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் வீரர்களின் நிதியுதவியுடன் கல்வியில் சிறந்து விளங்கும் உயர்தரம் கற்கும் 7 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதியில் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் சிறந்த இளம் வீரருக்கான விருது, வருடத்திற்கான சிறந்த வீரர் விருது மற்றும் வாழ் நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. வாழ்நாள் சாதனையளர் விருதினை ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான வி.சுகிர்தகுமார் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.(மா)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!