அரசு எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை:காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

இலங்கை அரசு எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க முன்வந்திருக்குமானால் நாம் ஜ.நா.சபையிடம் நீதி கோரி சென்றிருக்கமாட்டோம் இலங்கை அரசு எமது நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்ததன் விளைவாகவே நாம் ஜ.நா.சபையிடம் நீதி கோரி சென்றோம் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் புதிய அலுவலகத்தினை திறந்து அங்கு அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் சிதர்தேங்காய் உடைத்து வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஞாயிறு மாலை(30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள், இலங்கை அரசு ஏப்ரல் 21 குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து செயற்பட்ட தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து வருவது போன்று கடந்த முப்பது வருடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தோடும் படலத்துக்கும் கண்ணீருக்கும் ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு முப்பது வருடங்களைத் கடந்தும் தாய்மார்கள், மனைவிமார்கள் மற்றும் உறவினர்கள் வீதிகளில் மழை,வெயில் இன்றி பசிபட்டிணியோடு கண்ணீருடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் எமது கண்ணீருக்கு ஒரு பதிலும் கூறாது இலங்கை அரசு மௌனமாக இருப்பது எமக்கு வேதனையளிக்கும் விடயமாக இருந்து வருகின்றன. நாட்டில் கடந்த ஏப்ரல் 21ல் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு விரைந்து செயற்பட்டு அவர்களுக்கான தீர்வை வழங்க முன்வந்தது போன்று எமது கண்ணீருக்கும் ஒரு தீர்வை இலங்கை அரசு வழங்க வேண்டும்

நாட்டில் அண்மையில் எற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக இரண்டு மாதங்களாக எமது சங்கத்தின் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்ததுடன் மீண்டும் எமது போராட்டங்களை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட வலிந்த காணாமல் ஆக்கப்பட்டோர் உறவகளின் சங்க உறுப்பினர்கள் மேலும் தெரிவித்து இருந்தனர்.(மா)

 

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!