கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு : நீதிபதியை தீர்வுகாணுமாறு மக்கள் கோரிக்கை

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதானமாக கல்லாறு உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்ணுக்காக போராடிய பின்னரும் மண் கொள்ளையர்களிடமிருந்து மண்ணுக்காக மீண்டும் அஹிம்சை வழியில் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ள நிலையில் கல்லாறு , பகுதிகளில் தினமும் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்ணகழ்வு இடம்பெற்று வரும் பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது.

குறித்த பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. குறித்த சட்டவிரோத மண்ணகழ்வு தொடரபில் பல்வேறு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். நாள் ஒன்றிற்கு சுமார் முப்பது கனரக வாகனங்கள் கொண்டு மணல் அகழ்ந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் இதனால் நாளாந்தம் பாவிக்கப்படும் வீதி பாலம் போன்றன சேதத்திற்கு உள்ளாவதாகவும் அருகில் கடல் இருப்பதானால் இவ்வாறாக மண் அகழ்வதனால் குடிநீருடன் உவர் நீர் கலப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், இவ்விடயமாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லையென பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அரச அதிகாரிகள் தொடக்கம் அரசியல் வாதிகள் மற்றும் போலீசாருக்கும் பலமுறை அறிவித்தும் கூட எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவே இதற்கு ஒரே ஒரு தீர்வாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி குறித்த பகுதியை நேரில் வந்து பார்வையிட்டால் மட்டுமே இதனை நிறுத்த முடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!