டின்சின் மண்டபம் பிரதேச செயலகமாக மாற்றம் : மக்கள் எதிர்ப்பு

நுவரெலியா பொகவந்தலாவ ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையிடம் அனுமதி பெறாது, பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்திற்கு, நோர்வுட் பிரதேச சபையை கொண்டு வந்தமைக்கு, டின்சின் நகர வர்த்தகர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொது மக்கள் இனைந்து, இன்று சத்தியாக்கிர போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பொகவந்தலாவ டின்சின் நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும், இன்று காலையில் இருந்து மூடப்பட்டு, டின்சின் கலாசார மண்டபத்திற்கு முன்பாக, பாதாதைகளை ஏந்தியவாறு, சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராட்டகாரர்கள் மண்டபத்தை சங்கிலியினால் பூட்டியுள்ளனர்.

பொகவந்தலாவ டின்சின் சௌமிய பவான் மண்டபம், 2010 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால், மக்கள் நலன் கருதி திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், திடீரென நோர்வூட் பிரதேச சபையை, இந்த மண்டபத்தில் நடாத்த, தங்களிடம் எந்த தரப்பினரும் அனுமதி பெறாமல், பலவந்தமாக உபகரணங்களை கொண்டு வந்துள்ளார்கள் எனவும், எனவே இது சட்டவிரோத செயல் எனவும், மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பிக்க முன்னர், டின்சின் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில், பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட மக்கள், பேரணியாக கலாசார மண்டபம் வரை சென்று, சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன் போது, கலாசார மண்டபம், மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், மண்டபத்திற்கு நோர்வுட் பிரதேச சபையை கொண்டு வந்தமைக்கு தாங்கள் எதிர்ப்பு அல்ல எனவும், ஆனால் ஆலய பாரிபாலன சபையுடன் கலந்துரையாடாமல், அனுமதி பெறாது, திருட்டுத்தனமாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும், மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொகவந்தலாவ டின்சின் பிரதேசத்தில், சுமார் 18 தோட்டப் பகுதிகள் காணப்படுகின்ற நிலையில், மக்கள் கலாசார நிகழ்வுகளுக்காக, மண்டபத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாளையதினம் நோர்வுட் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக, பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், சில உபகரணங்களை ஏற்றி வந்த வாகனத்தையும், மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற, மத்திய மாகாண ஆளுனரின் செயலாளர் கிர்ஸாந்த, சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் சம்பத்திடம் உரையாடினார்.

நோர்வுட் பிரதேச சபையை, பொகவந்தலாவ டின்சின் நகரத்தில் உள்ள, கலாசாலை மண்டபத்திற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை எனவும், இருந்தாலும் மத்திய மாகாண ஆளுனர் தனக்கு உத்தரவு பிறப்பித்தால், நாளை இடம்பெற இருக்கின்ற திறப்பு விழா, தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என, உள்ளுராட்சி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக குறித்த மண்டபம் தொடர்பில், ஆலய பாரிபாலன சபையினருக்கும், நோர்வுட் பிரதேச சபைக்கும், எவ்வித ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை எனவும், எனவே ஆளுனர் ஊடாக, தற்காலிகமாக திறப்பு விழாவை இடைநிறுத்த, நோர்வுட் பிரதேச சபை தலைவருக்கு தொலைநகல் அனுப்பப்படும் எனவும், உள்ளுராட்சி ஆணையாளர், மத்திய மாகாண ஆளுனரின் செயலாளர் ஊடாக உறுதி மொழி வழங்கினார்.

அதன் பின்னர், சத்தியாக்கிரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கலைந்து சென்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!