கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, இம்முறை அதிகளவான பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அதனடிப்படையில், கடந்த 3 நாட்களில் 7 ஆயிரத்து 163 பேர் பயணம் செய்துள்ளனர்.
கதிர்காமம் உற்சவம் எதிர்வரும் 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 17 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
கிழக்கில் முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒன்றான, உகந்தை மலைமுருகன் ஆலயத்தில் இருந்து, பக்தர்கள் யால குமண சரணாலய காட்டுப்பாதை ஊடாக பயணிக்கின்றனர்.
கதிர்காமம் செல்லும் பக்தர்;களின் நலன்கருதி, கடந்த 27 ஆம் திகதி காட்டுப்பாதை உத்தியோக பூர்வமாக திறந்து விடப்பட்டுள்ளது.
இக் காட்டுப்பாதையானது, எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும்.
இந்த நிலையில், கடந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில், 7 ஆயிரதது 163 பேர் காட்டுப்பாதைக்குள் நுழைந்துள்ளனர்.
காட்டுப்பாதை திறக்கப்பட்ட முதல் நாளான 27 ஆம் திகதி 3 ஆயிரத்து 705 பேரும், 28 ஆம் திகதி 2 ஆயிரத்து 20 பேரும், நேற்று ஆயிரத்து 438 பேரும் காட்டுப்பாதைக்குள் நுழைந்துள்ளனர்.
இப் பாதையானது, இன்றில் இருந்து 9 தினங்களே திறந்திருக்கும் எனவும், யாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள், காட்டுக்குள் தனியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், கூட்டமாகச் செல்லவே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், காடடுப்பாதையில் அடியார்களுக்குரிய குடி நீர், சுகாதார வசதிகள், பாதுகாப்பு என்பன, படைத்தரப்பினராலும், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உகந்தைமலை ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
இம்முறை, வடக்கு கிழக்கு, மலையகம் என நாட்டின் பல பாகங்களில் இருந்தும், பெருமளவான முருக பக்தர்கள், கதிர்காமக்கந்தனை நோக்கி கால்நடையாகச் செல்கின்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், பக்தர்கள் காட்டுக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கமைய, பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெயர் விபரங்கள் பதியப்பட்ட பின்னர், காட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
அத்துடன், காட்டுப்பகுதியில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால், பக்தர்கள் செல்லக்கூடாது எனவும், படைத்தரப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், காட்டுக்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.(சி)