முல்லை மீனவர்களால் திருப்பி அனுப்பப்பட்ட அட்டைத் தொழிலாளர்கள்!

முல்லைத்தீவில் அட்டைத்தொழிலுக்கு சென்ற மீனவர்கள், மாத்தளன் மீனவர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.முல்லைத்தீவு மாவட்டம் சாலைப்பகுதியில் அட்டைத்தொழில் செய்வதற்காக மன்னாரில் இருந்து சென்ற மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்களால் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்

நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றைய மாவட்டத்திற்குச் செல்வதற்கு, பல்வேறு கெடுபிடிகளை அரச திணைக்களங்கள் மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில், மன்னார் மாவட்ட அட்டைத் தொழிலாளர்கள், முல்லைத்தீவு கடற்பரப்பில், அட்டைத்தொழில் செய்வதற்காக இரண்டு வாகனங்களில் நான்கு படகுகளை ஏற்றி, முல்லைத்தீவு நோக்கிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மாத்தளன் சந்தியில் வைத்து, மன்னார் பிரதேச மீனவர்களை மறித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், முல்லைத்தீவு செல்லவிடாது தடுத்தபோது மீனவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு பொலீசார் மற்றும் படையினர், மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையினை
சுமூகமாக்க முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

மன்னாரில் இருந்து சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அனைத்து அனுமதியுடனும் முல்லைத்தீவு சென்ற மன்னார் மாவட்ட மீனவர்கள், மாத்தளன் மீனவர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் கொட்டுப்போமிட் எனப்படும் அனுமதி எடுக்காத நிலையில், கரையோரத்தில் அட்டை பிடிப்பதற்கான கரையோர மீனவ அமைப்புக்களின் ஒத்துழைப்பும் இல்லாத காரணத்தினால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீக்கப்பட்ட பின்னர், சட்ட அனுமதிகளுடன் அவர்களைத் தொழிலுக்கு வருமாறு, மாத்தளன் பகுதி மீனவர்கள், அட்டைத்தொழிலாளர்களை திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!