பயங்கரவாத நிதி முடக்கம்:ஜி20 நாடுகள் தீர்மானம்!

பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை முடக்க ஜி20 நாடுகள் தீர்மானித்துள்ளன.

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை முடக்க நடவடிக்கை எடுப்பதாக ஜி20 அமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் மாநாட்டின் பின்னர் பிரகடனம் வெளியிடப்பட்டது.

அதில் உலகப் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ள நிலையில், உலகளாவிய வர்த்தகம் மற்றும் புவி அரசியல் தொடர்பான பதற்றங்கள் தீவிரமாகியுள்ளதாகவும் அந்த இடர்களுக்கு தீர்வு காணவும், அதற்கான நடவடிக்கையை எடுக்கவும் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வலுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, அதற்காக பல்வேறு கொள்கைத் திட்டங்களை பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்துவதற்கு, சுதந்திரமான, நேர்மையான, பாகுபாடு இல்லாத, வெளிப்படையான,சீரான வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது என்றும், ஜி20 நாடுகளின் சந்தைகளில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலை எதிர்கொள்ளும் விவகாரத்தில், 2019 ஆண்டு தொடக்கம் 2021-ஆம் ஆண்டுக்கான ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் ஜி20 நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

இதேவேளை, ஊழல் குற்றங்களில் தேடப்படும் நபர்களுக்கு புகலிடம் வழங்காதிருக்கவும், ஊழலை தடுக்கும் சர்வதேச நடவடிக்கைக்கு தலைமை ஏற்கவும், ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இணைந்து செயற்படவும் ஜி20 நாடுகள் முடிவு செய்துள்ளதாகவும் ஜி20 அமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!