கொரோனா பாதிப்பு: உண்மையை சீனா மறைப்பதாகத் தகவல்

கொரோனா பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை வெளியிடாமல் சீனா மறைப்பதாக அமெரிக்கா கூறி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தங்கள் நாட்டில் கொரோனாவால் 84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 4,673 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.இந்தநிலையில் சீனாவின் ஷாங்ஷா நகரில் உள்ள, தேசிய இராணுவத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் ஷாங்ஷா நகரிலுள்ள, தேசிய இராணுவத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் கசிந்துள்ளதாகவும், குறித்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்ததன் மூலம், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 40 ஆயிரமாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு கூறி இருக்கும் நிலையில், அந்நாட்டு இராணுவம் நடத்தும் பல்கலைக் கழகத்தின் தகவல்கள் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 6 இலட்சத்து 40 ஆயிரம் என்று தெரியவந்து இருப்பதால், கொரோனா பாதிப்பு பற்றிய உண்மைகளை சீனா மறைப்பதாக கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் இருந்து இரகசியமாக கசிந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, கடந்த பெப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சீனா முழுவதும் உள்ள 230 நகரங்களில் 6 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனாத் தொற்று ஏற்பட்டவர்களின் பெயர் விவரங்கள் இல்லாமல் வெறும் எண்ணிக்கை மட்டுமே இருப்பதால், ஒரு நபரே பலமுறை பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், குறித்த புதிய தகவல் பற்றி அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது.

இவ்வாறான ஒரு புதிய புள்ளிவிவரம் வெளியானது குறித்து எதுவும் தெரியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!