ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு! – 7 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் கடந்த 12-ந்தேதி புகுந்த பயங்கரவாதிகள் பிரசவ வார்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பெண்கள் என 24 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கடுமையாக உலுக்கியது.

இதையடுத்து தலீபான்கள் உள்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும்படி அந்த நாட்டு ராணுவத்துக்கு அதிபர் அஷ்ரப்கனி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்துள்ள பயங்கரவாதிகள் ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ கட்டிடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணமான கஜினியில் உள்ள தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் கட்டிடத்துக்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்கச் செய்தனர்.

அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

எனினும் தலீபான்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!