மட்டக்களப்பில், விசேட சோதனை நடவடிக்கைகள்!!

மட்டக்களப்பு பொலிஸார், மாநகர சபை மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களினால் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்களினால் விடுக்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய மூடப்பட்டிருந்த உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பொலிஸ் தலைமையகம், மாநகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அழகுக்கலை நிலையங்கள் ஆகியவற்றுக்கு விடுக்கப்பட்ட சுகாதார நடைமுறைப்படுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள உணவகங்கள், நகர்ப் பகுதியில் உள்ள உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அழகுக்கலை நிலையங்கள் போன்றவற்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி ஆணையாளர் சிவராஜா, பொதுசுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை பொது இடங்களில் பேணவேண்டிய, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!