நாடாளுமன்ற கலைப்பை சவாலுக்குட்படுத்திய வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கானது, வழக்கின் முக்கியத்துவம் கருதியும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் நடாத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகள் இடம்பெறும் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் விசாரணை மன்றம் ஒழுங்கமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கினை விசாரணை செய்வதற்காக 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிவாதிகளாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் அங்கத்தவர்களான பேராசிரியர் இரட்ணஜீவன் கூல், அபேசேகர ஆகியோரும், சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, பாக்கியசோதி சரவணமுத்து, அரசியல் கட்சியான சமகி ஜன பலவேகய ஆகிய மனுதாரர்களும், முருத்தெட்டுவ ஆனந்த தேரர் உட்பட எட்டு இடையீட்டு மனுதாரர்களும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்களான ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹமட் ஜிஃபர், அழகரட்னம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், சஞ்ஜீவ ஜயவர்த்தன ஆகியோரும் சிரேஸ்ட சட்டத்தரணிகளான விரான் கொரிய, சுரேன் பெர்னாண்டோ ஆகியோர் இன்று முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை காலை 10 மணிவரை வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!