தேர்தல் அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் வழக்கு விசாரணைக்கு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கானது, வழக்கின் முக்கியத்துவம் கருதியும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் நடாத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகள் இடம்பெறும் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் விசாரணை மன்றம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கினை விசாரணை செய்வதற்காக 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிவாதிகளாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் அங்கத்தவர்களான பேராசிரியர் இரட்ணஜீவன் கூல், அபேசேகர ஆகியோரும். சுகாதார திணைக்களப் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, பாக்கியசோதி சரவணமுத்து, அரசியல் கட்சியான சமகி ஜன பலவேகய ஆகிய மனுதாரர்களும், முருத்தெட்டுவ ஆனந்த தேரர் உட்பட எட்டு இடையீட்டு மனுதாரர்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்களான ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹமட் ஜிஃபர், அழகரட்னம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், சஞ்ஜீவ ஜயவர்த்தன ஆகியோரும் சிரேஸ்ட சட்டத்தரணிகளான விரான் கொரிய, சுரேன் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.

வழக்கினை முன்மொழிந்து முதல் சட்டவாதத்தை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் வழக்கில் மனுதாரர்கள், பிரதிவாதிகள், சட்டத்தரணிகள், வழக்கு பார்வையாளர்கள் இடையே சமூக இடைவெளியினைப் பேணும் முகமாக விசேட ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!