முல்லைத்தீவில் பொலிஸார் அடாவடி: மக்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் பொதுமக்கள் மீது பொலிசார் தாக்குதல் நடாத்துவது தொடர்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு நபருடைய பெயரைக் கேட்டு மூன்று குடும்பஸ்தர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு சென்றபோது, பொலிசார் சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டும் இன்று வரை அவ்விடயங்கள் நீதிமன்றுக்கு செல்லாத நிலையில், நேற்று மீண்டும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த கருணாநிதி கஜேந்திரன் என்பவர் மீதே நேற்று பொலிசார் தாக்குதலை நடத்தியதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதரிகுடா பகுதியில் தந்தையாருடன் சேர்ந்து தென்னை மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதாக, முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டதாக, அப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, கைதானவருடைய மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்துச் சென்ற நபர், பொலிஸாரால் தாக்கப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் குறித்த விடயம் தொடர்பில் முறையிட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!