முகத்துவாரம் – மாவத்தை பகுதியில் புதிய எரிபொருள் குழாய் மார்க்கத்தை உருவாக்கும் பணிகளின்போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே பொறுப்பெற்க வேண்டும் என கனியவள தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை கொண்டு செல்வதற்காக குறித்த புதிய குழாய் மார்க்கம் அமைக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், குறித்த பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக முன்வைக்காத பட்சத்தில் நாளைய தினம் முதல் ரவிகருணாநாயக்கவின் அமைச்சின் கீழ் இயங்கும் மின்சாரசபைக்கு எரிபொருளை விநியோகிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனியவள தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு முதல் கொலன்னாவை எரிப்பொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள் விநியோக குழாய் தற்போது பாரிய பாதிப்படைந்துள்ளது.
இதனால் கொலன்னாவை எரிப்பொருள் களஞ்சியசாலைக்கு மூன்று நாட்களில் கொண்டு செல்லக்கூடிய எரிபொருள் 6 நாட்களில் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் ஏற்படும் தாமதத்தின் காரணமாக இலங்கைக்கு எரிபொருளை கொண்டுவரும் கப்பல்களுக்காக மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 80 ஆண்டுகளுக்கு முன்னர் 10 அங்குல குழாய் மார்க்கமே இருந்து வந்ததாகவும் அதற்கு பதிலாக 12 அங்குல குழாய் மார்க்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த குழாய் மார்க்கம் முகத்துவாரம் ஊடாக செல்கின்ற நிலையில் அங்கு வசிப்பவர்கள் அதற்கு தடை ஏற்படுத்துவதாகவும், குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கனியவள தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. (நி)