மன்னாரில் நீதி கோரிப் போராட்டம்!

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உடனடியாக மன்னார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த இரு சகோதரிகளின் மரணத்திற்கும் நீதிகோரி குடும்ப உறவுகள் இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் சமூக இடைவெளிகளைப் பேணி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒன்று கூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றும், குறித்த இடத்தைவிட்டு உடனடியாக அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும் அவர்கள் அவ்விடத்தில் இருந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் செல்லாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதோடு, இவ்வாறான போராட்டங்களை தற்போதைய சூழ்நிலையில் செய்ய முடியாது என எச்சரித்ததோடு, இப்பிரச்சினை தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு கோரிக்கை விடுவித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!