பொதுமக்களுக்காக போக்குவரத்து வசதி அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் 3 ஆயிரத்து 338 பேருந்துகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பணிகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இந்த போக்குவரத்து வசதி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்கும்போது கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் ஏற்படக்கூடிய இடர்கள் தொடர்பில் அறிவியல் ரீதியான தெளிவூட்டல்களை வழங்குமாறு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவால் போக்குவரத்து துறை தொடர்பான நிபுணர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமைய மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் செயற்படும் பல பேராசிரியர்களினால் அது தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும்போது ஜன்னல்கள் திறக்கப்பட்டிருப்பின் பேருந்தினுள் வீசும் காற்றால் பின்னால் உள்ள ஆசனங்களுக்கே அதிக அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்தின் பின்னால் இருந்து வீசும் காற்று சுழலாக மாறி பேருந்தின் முன் பகுதிக்கும் வரக்கூடும்.

எனவே பேருந்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு தும்மல் ஏற்படுவதன் ஊடாக பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் அச்சறுத்தல் ஏற்படக்கூடும் என காற்றோட்டம் குறித்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் பேருந்தின் நடத்துடனருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் அவரின் பாதுகாப்பிலேயே பேருந்தில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பும் தங்கியுள்ளது.

அத்துடன் பேருந்தில் அமராது பயணிப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அதிக வாய்ப்பு காணப்படுவதாக அந்த ஆய்வின் ஊடாக தெரியவந்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!